டில்லி

பாலகோட் விமானப்படை தாக்குதல் பற்றி பிரதமர் என்ன கூறுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேட்டுள்ளார்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தற்கொலைப்படைதாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.   அதை ஒட்டி இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அங்கு முகாம் இட்டிருந்த 300 ஜெய்ஷ் ஈ முகமது இயக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்திய அரசு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் குறித்து எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.     எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதல் குறித்து ஆதாரங்கள் தேவை என குரல் எழுப்பின.   அதற்கு பிரதமர் மோடி வீரர்களின் துணிச்சலுக்கு ஆதாரம் கேட்பதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.   அத்துடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,  எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் பாகிஸ்தான் ஆதரவாக உள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்,  ”சர்வதேச ஊடகங்கள் பல தெரிவித்துள்ள செய்திகளில் பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் யாரும் உயிர் இழக்கவில்லை என கூறப்படுகிறது.    இந்த தாக்குதல் குறித்து பிரதமர் என்ன கூறுகிறார் ?  பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்வதேச ஊடகங்கள் செயல்படுகின்றனவா என நான் பிரதமரை கேட்கிறேன்.

இதற்கு முன்பு சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தன.   அப்போது அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.  இப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி அளிப்பதால் உங்களிடம் கேள்விகள் கேட்கிறோம்.    இது உண்மையை தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே அன்றி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை” என கூறி உள்ளார்.