சண்டிகர்: இந்திய கேப்டன் விராத் கோலி, தனது கண்பார்வைத் திறனை சோதித்துக் கொள்வதோடு, அதிகப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம் என்றுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ்.
இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், கேப்டன் விராத் கோலிக்கு மோசமான அனுபவமாக அமைந்தது. டெஸ்ட் போட்டிகளின் 4 இன்னிங்ஸ்களில் மொத்தமே 38 ரன்கள்தான் அடித்தார்.
அதுவும் அவருக்கு மிகவும் இலகுவான இன்ஸ்விங் பந்துகளை சந்திக்க தடுமாறினார். எனவே, இது கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள கபில்தேவ், “ஒவ்வொரு சிறந்த வீரருக்கும் இதுபோன்ற நெருக்கடியான தருணங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுவது குறித்து, அவரின் கண்பார்வைத் திறனை சோதித்துக் கொள்வது நல்லது. மேலும், அத்தகையப் பந்துகளில் அதிகம் ஆட்டமிழக்கும் நிலை ஏற்படும்போது, இன்னும் அதிகமான பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு வீரர் தனது 24 வயதைக் கடந்த பின்னர், கண் பார்வைத் திறனை பராமரிப்பது அவசியம். எதிர்வரும் ஐபிஎல் தொடர், கோலியின் திறனை மீட்டெடுப்பதில் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.