சென்னை: சென்னையின் பிரபலமான மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி, வரும் 25, 26ந்தேதிகளில் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தேவைப்படும் நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து, கோவிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலையில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி சென்று போகலாம். அடையாறு பகுதியில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.கே.மடம் சாலை, சிருங்கேரி மடம் சாலை, லஸ்சர்ச் சாலை, விவேகானந்தா கல்லூரி வழியாக போக வேண்டும்.
கோவில் குளம் அருகில் உள்ள பஸ் நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் உள்ள அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்படும்.
வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.
லஸ் சர்ச் சாலை, காமதேனு திருமண மண்டபம், வெங்கடேச அக்ரகாரம், பறக்கும் ரெயில் மேம்பாலம் கீழ் பகுதி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம். பி.எஸ்.சிவசாமி பள்ளி, ஆர்.ஆர்.சபா அருகேயும், போலீசாரின் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கபாலீஸ்வரர் கோவிலின் முக்கிய திருவிழாவான பங்குனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழவாக, திருத் தேரோட்டம், அறுபத்து மூவர் திருவீதியுலா பிரசித்தி பெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலையில் கூடி, ஈஸ்வரின் அருள் பெற்று செல்வது வழக்கமாகும்.