சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று சென்னை வந்தது. தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சியினர், அதிகாரிகள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலாளருடன், தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 2 நாட்களாக ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து, செய்தியளார்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. அதற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சட்டப்பேரவை தேர்தலுடன், குமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.