திருச்செந்தூர்,

றுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா இந்த மாதம் 20ந்தேதி தொடங்குகிறது.

ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழா 20ந்தேதி முதல் 26ந்தேதி வரை நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளிலேயே திருச்செந்தூரில்தான் கந்தசஷ்டி விழா வெகு கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவில் பங்குபெற உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து திருச்செந்தூர் வந்து கலந்துகொள்வார்கள்.

கந்தசஷ்டி விழா தொடங்கும் 20ந்தேதி  அன்று காலை 6 மணிக்கு யாகசாலையில் அருள்மிகு ஜெயந்திநாதர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை தொடங்குகிறது.

21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

அக்.25-ம் தேதி மாலை 4.30 மணிக்குமேல் கடற்கரையில் வெகு விமரிசையாக  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.  இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்

அதையடுத்து இறுதி நாளான 26-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

விழா நாட்களான ஒரு வாரமும் திருக்கோயில் கலையரங்கில் காலை, மாலை சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறும்.

திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும்  போக்குவரத்து துறை சார்பில், திருவிழாவிற்கு கூடுதலாக 550 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.