வாஷிங்டன்:

அமெரிக்கர்கள் சிலரிடம் இனவெறி அதிகரித்து வருவதாக துப்பாக்கிச்சூட்டிலிருந்து இந்தியரை காப்பாற்ற முனைந்த அமெரிக்கர் கிரில்லியட் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன் தினம் கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இந்தியர் ஸ்ரீனிவாஸை, அங்குவந்த அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றார்.

அப்போது அவர் ”என் நாட்டை விட்டு வெளியேறு” என்று கூச்சலிட்டபடி சுட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த ஸ்ரீனிவாசனின் நண்பர் அலோக் மதாசனி  மற்றும் அமெரிக்கர் கிரில்லியட் என்பவரும் ஓடி வந்து ஸ்ரீனிவாசை காப்பாற்ற முனைந்தனர்.

ஆனால் அவர்களும் துப்பாக்கிக்குண்டுகள் பட்டு காயமடைந்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்கர் கிரில்லியட், சில மாதங்களாக அமெரிக்கர்கள் சிலரிடம் இனவெறி அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. இது தவறான போக்கு என்று வருந்தினார். அதேநேரம் இனவேறுபாடு எல்லா அமெரிக்கர்களிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.