கான்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புஹாராயன் எனும் பகுதியில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், ரயிலின் 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இந்த பெட்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்ததில், பலியானோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இருநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு ரயில்வே துறை, உபி. அரசு, மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நிவாரண உதவியாக நிதி அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதில் ரயில்வே துறையால் வழங்கப்பட்ட 5000 ரூபாயில், பத்து நூறு ரூபாய் நோட்டுகளும், ஒன்பது ஐநூறு ரூபாய் நோட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
உடல் நலம் உள்ளவர்களே, பழைய ஐநூறு ரூபாய், 1000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கி வங்கியாக அலைகிறார்கள். ஏ.டி.எம்.களில் ஆகப்பெரும்பாலானவை இயங்கவில்லை.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பழைய ஐநூறு ரூபாய் நோட்டை அளித்திருக்கிறார்களே என்று தனது ட்டவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வேதனைப்பட்டுள்ளார் பத்திரிகையாளர் பிரசாந்த் குமார்,.
பழைய ஐநூறு ரூபாயை மறைமுகமாக மாற்றும் கருப்பு பண புள்ளிகளுக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel