அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் அமைந்துள்ளது.
நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, பலர் நாட்டரசன்கோட்டை வருவர்.
பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும்போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது.
இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, “நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்” எனக் கோடிட்டு காண்பித்தாள்.
மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார்.
அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், “கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்” என போற்றப்பட்டது.