பெங்களூரில் வசித்து வந்த அபிநயா சரஸ்வதி, ‘கன்னடத்து பைங்கிளி’ என பல புனைப்பெயர்களால் அறியப்பட்ட கன்னடத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை பி. சரோஜாதேவியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
1938ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்த சரோஜாதேவி 1955ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அவரது அறிமுகப் படமே தேசிய விருது பெற்றதை அடுத்து பிரபலமான சரோஜாதேவி 1957ம் ஆண்டு தமிழில் வெளியான தங்கமலை ரகசியம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடன் ஜோடி சேர்ந்து நாடோடி மன்னன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி, 1967ம் ஆண்டு தனது திருமணம் வரை தமிழில் நெம்பர் ஒன் கதாநாயகியாக வலம்வந்தார்.
தொடர்ந்து 1974 வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சரோஜாதேவி, 1954 முதல் 1984 வரை 29 ஆண்டுகள் தொடர்ச்சியாக 161 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் நடித்துள்ள சரோஜாதேவி அனைத்து மொழி திரைத்துறையிலும் கொடிகட்டி பறந்தார்.
கன்னட படத்தின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட சரோஜாதேவி, தமிழில் எம்.ஜி.ஆருடன் அதிகபட்சமாக 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும், ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார், கல்யாண்குமார், உதயகுமார் ஆகியோருடன் நடித்தார். தெலுங்கில் ஏ. நாகேஸ்வர ராவ், என்.டி. அவர் ராமாராவுடன் நடித்தார். திலீப் குமார், ராஜேந்திர குமார், ஷம்மி கபூர் மற்றும் சுனில் தத் ஆகியோருடன் இந்தியில் நடித்த சரோஜா தேவி, நான்கு மொழி நட்சத்திரமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார்.
சரோஜா தேவி 1969 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும், 1992 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதையும் இந்திய அரசிடமிருந்து பெற்றார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ள இவருக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
87 வயதான நடிகை சரோஜாதேவி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானதை அடுத்து அவரது உடல் பெங்களூரை அடுத்த கொடிகேஹல்லியில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் முன்னதாக பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.