கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 28

பா. தேவிமயில் குமார்

இதுவும் கடந்து போகும்!

*அலை கடல்
ஆர்ப்பரித்து அழுவதில்லை
ஒரு நிமிடம் கூட
ஓய்வில்லையென!

*சூரியன் ஒருபோதும்
சுருள்வதில்லை,
சூடாக இருப்பதால்!

*காற்று ஒரு போதும்
கதறுவதில்லை,
காலமெல்லாம் அலைகிறேன், என,

*பறவைகள் ஒருபோதும்,
பதுறுவதில்லை,
பதர்கள் உணவாக
கிடைத்தால் கூட,

*விலங்குகள் ஒரு போதும்
விலகுவதில்லை
உறவுகள் பிடிக்கவில்லை
என,

*செடிகள் ஒருபோதும்
சிந்துவதில்லை
கண்ணீரை,….
கிடைக்கும் இடத்தில்
துளிர்த்திடுமே!

*பூக்கள் ஒரு நாளும்
புன்னகைக்க
மறப்பதில்லை…
ஆயுள் ஒரு நாள்
என்றாலும்!!

*குளிர்காலம் முடியும் வரை
கோதுமை தலை
காட்டுவதில்லை,
மண்ணுக்குள்ளிருந்து!

*இயல்பான இயற்கையை
போல,
எங்கும் இருக்கும்
இடர்கள்……
இதுவும் கடந்திடும்
இயல்பாகவே!