கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 14

பா. தேவிமயில் குமார்

பண்டமாற்று

சருகுகளை தூக்கி
செல்கிறது காற்று !
காற்றறிய வாய்ப்பில்லை
இலையின் உணர்வுகளை !

விரிந்து கொண்டே
செல்லும் வட்ட
அலைகளின்
நினைவுகளை, மீண்டும்
தன்னகத்தே சேமிக்கிறது
குளத்தின் நினைவுகள் !

உருவத்தை
அடிக்கடி மாற்றி
ஓடிக்கொண்டேயிருக்கும்
மேகம், மகிழ்ச்சியாக
இருப்பதாய் காட்டிக்கொண்டிருக்கிறது
ஆனாலும்….
உடைந்து அழுது விடுகிறது
என்றோ ஒருநாள் !

புத்தகத்தில்
பார்த்தது போலவே
“இதயம்” வண்ணமாக
இருக்குமென நினைத்தது
ஒரு பருவம் !

உலகின் முதல்
பண்டமாற்று “நினைவு”
என்ன……
ஒரே இடையீட்டுப் பொருளை
இருவரும் வாங்குகிறோம் !
ஆதாம், ஏவாள் காலந்தொட்டு !