டில்லி
பா ஜ க பற்றியும் கமலஹாசன் பற்றியும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கருத்துக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அவர் தற்போது தேர்தல் நடத்தினால் தி மு க வெல்லும் எனவும் அ தி மு க மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பே இல்லை எனவும் கூறினார். மேலும் பா ஜக, கமலஹாசன் பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.
கனிமொழி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலாக, “பாஜக தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சியாக வருமா என்பதை தற்போது சொல்ல முடியாது. தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மதச் சார்பின்மை, மொழி, தமிழர்களின் உரிமை, மற்றும் சமூக நீதிக்கு புரம்பான எதையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மேலும் தற்போது பா ஜ க அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்துக்கு நீட் தேர்வு காரணமாக ஒரு தலித் மாணவி உயிரிழந்தார். இதற்கு மத்திய அரசு ஒரு முடிவும் எடுக்கவில்லை. இதன் மூலம் பா ஜ க அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என தெரிகிறது. இப்பேர்பட்டவர்கள் வருவதை தமிழக மக்கள் நிச்சயம் விரூம்ப மாட்டார்கள். இந்துத்வா என்னும் பெயரில் நடத்தப்படும் கொலைகளும் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் தமிழர்களுக்கு பிடிக்காத ஒன்று. எனவே இதே நிலை நீடிக்கும் வரை தமிழ்நாட்டில் பா ஜ க வளர்ச்சி பெற முடியாது.
கமலஹாசன் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. இது வரை அவருடைய கொள்கைகள் என்ன எனவும் தெளிவாக தெரிவிக்கவில்லை. தற்போதுள்ள காவேரி பிரச்னை, நீட் தேர்வு போன்றவைகளில் தனது தெளிவான கருத்துக்களை சொல்லாத வரையில் என்னால் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா என சொல்ல முடியாது. அவர் தனது கட்சியை ஆரம்பிக்கட்டும். தனது கொள்கைகளையும், கருத்துக்களையும் தெளிவாக்கட்டும். பிறகு அவரைப் பற்றிய என் கருத்தை நான் சொல்கிறேன்” எனக் கூறி உள்ளார்.