சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 157 நாட்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம் பி தெரிவித்துள்ளார்.

இன்று திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி ,

”அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி அதே பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது. 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்ட போது, ‘சிபிஐ விசாரணை தேவையில்லை’ என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, ”இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்” என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.

என அறிக்கை வெளியிட்டுள்ளார்.