சென்னை,

2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, அ.ராசா ஆகியோர் இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை வந்தனர். அவர்களை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு காரணமாக அப்போ தைய திமுக அமைச்சரான ராஜா சுமார் ஒன்றரை ஆண்டுகளும், கனிமொழி 8 மாதங்கள்  சிறை யில் இருந்த நிலையில், கடந்த 21ந்தேதி தீர்ப்பின்போது, குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என சிபிஐ நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து.

இதன் காரணமாக திமுக மீதான கரை நீங்கி உள்ளதாகவும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

வழக்கில் விடுதலையான பின்னர் சென்னை திரும்ப உள்ள அவர்களை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே கனிமொழியைப் புகழ்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என விமானநிலைய பகுதியே களைகட்டியிருந்தது.

இந்நிலையில், இன்று காலை டில்லியில் இருந்து ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் இன்று காலை 9 மணி அளவில் டில்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

மதியம் 12 மணி அளவில் சென்னை வந்த அவர்களை திமுக செய்லதலைவர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் துரைமுருகன், பொன்முடி, டிஆர்.பாலு உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டிருந்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து விமான நிலைய வாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய ராஜ, கனிமொழி இருவரும் தொண்டர்களின் கோஷங்களுக்கிடையே அவர்களின் வாழ்த்துக்களை பெற்றனர்.

அதைத்தொடர்ந்து இருவரும் காரில் ஏறி கோபாலபுரம் சென்றனர். அங்கு தலைவர் கருணாநிதியை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபாலபுரம் பகுதி களைகட்டி உள்ளது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அந்த பகுதியில் திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.