டில்லி

டில்லியில் மாற்றுத் திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் கொட்டும் மழையில் கனிமொழி பங்கேற்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக மாதம் ரூ.300 மத்திய அரசு இந்திராகாந்தி உதவித்தொகை எனும் பெயரில் வழங்கி வருகிறது.  நேற்று டில்லியில் ”இதை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி) முகாம் நடத்தி நாடு முழுவதும் சீராக வழங்க வேண்டும்,

அதுவரை பயன்கள் பெற யுடிஐடி-யை நிபந்தனை ஆக்கக் கூடாது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், வேலை நாட்களை 150 ஆக அதிகரிக்க வேண்டும், தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்குச் சங்கத்தின் அகில இந்திய தலைவர் கிரீஷ் கீர்த்தி தலைமை வகித்தார். ஊனமுற்றோர் உரிமைகளுக்கான என்பிஆர்டியின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் வி.முரளீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்ணா போராட்டத்தின்போது கனமழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த தர்ணாவில் திமுகவின் கனிமொழி எம் பி, முன்னாள் மத்திய அமைச்சரும் டெல்லி காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜய் மக்கான், என்பிஆர்டி நிர்வாகிகளான ஜான்சிராணி, அனிபென் முகர் ஜி, ரிஷிகேஷ் ரஜளி, அதுவய்யா, கைரளி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மதிப்புறு தலைவர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சோனியா, இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷ், மாற்றுத்திறனாளிகள் தேசிய ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அர்மன் அலி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.