வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் உயரிய கிரிக்கெட் விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை, 4வது முறையாக வென்றுள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் கேப்டன் கேன் வில்லியம்சன்.
அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுவதற்காக, இந்த விருது அவருக்கு 4வது முறையாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டிற்கான சிறந்த டெஸ்ட் பிளேயர் விருதும் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நியூசிலாந்தின் டெவான் கான்வே, இந்தாண்டிற்கான சிறந்த ஒருநாள் & டி-20 வீரர் விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது நிகழ்வு, கொரோனா தாக்கம் காரணமாக டிஜிட்டல் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வில்லியம்சன், கடந்த 6 ஆண்டுகளில், 4 முறை இந்த கெளரவமிக்க விருதை வென்றுள்ளார். நியூசிலாந்தின் ஹாமில்டனில், பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில், விண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சிறப்பாக செயல்பட்டார் வில்லியம்சன். அவர், டெஸ்ட்டில், தனது அதிகபட்ச சர்வதேச ரன்களான 251 ரன்களை அப்போது அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.