காஞ்சிபுரம்: மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,  காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம்  இன்று  (வியாழக்கிழமை) காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றினார்கள்.   கொடியேற்றத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீற்றிருப்பது போன்ற ஓவியம் வரையப்பட்ட விழா கொடி சிறிய பல்லக்கில் வைத்து ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சிவ வாத்தியங்களுடன், மங்கல மேளங்களுடனும் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டடு பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இ பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.   கோயில் ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றினார்கள். அதைத்தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

முன்னதாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.

பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும்,இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.