சென்னை: காஞ்சி ஏகாரம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 300 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் அரசால் மீட்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மதுரவாயல் மார்க்க சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 23 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 ஆயிரத்து, 512 சதுர அடி நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறைஅதிகாரிகள் மீட்டனர்.  அப்பகுதியில் உள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததோடு அவர்கள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்தும் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, அது மீட்கப்பட்டது.
இந்த நிலையில்,  காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 49 கிரவுண்டு நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் வாடகைக்கு உள்ளவர்கள்,  குத்தகை காலம் முடிந்தும் வாடகை ஏதும் செலுத்தாமல் தொடர்ந்து அனுபவித்து வந்தனர். மேலும் சிலர், சுயலாப நோக்கில் உள்வாடகை விட்டு ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதுகுறித்து, அறநிலையத்துறை சார்பில், ஆக்கிரமிப்புதாரரை சட்டரீதியாக வெளியேற்ற வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்தே, அங்கு குடியிரப்போர், தாமேகவே முன்வந்து மேற்படி இடத்தினை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தன் அடிப்படையில், இலாகா அலுவலர்கள் முன்னிலையில் இன்று (29.09.2021) சுவாதீனம் பெறப்பட்டது.