பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி, சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி.
ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதிதேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார். இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக (சிவந்த உடலுடன்) காட்சி கொடுத்தார். இதனால் சுவாமிக்கு “பவளவண்ணர்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இவருக்கு “பிரவாளவண்ணர்” என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த ஆதிசேஷன், பவளவண்ணரின் தலைக்கு மேல் குடையாக நின்றார்.
108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். மேற்கு நோக்கி வீற்புகோலம். பார்வதிதேவிக்கு இத்தலத்தில் காட்சி தந்துள்ளார். சுவாமியின் அருகில் சந்தான கோபாலகிருஷ்ணர் இருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர். மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீலநிறமாகவும் காட்சி தந்தாராம். அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார்.
ஒருசமயம் பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு சென்றார். விஷ்ணு அவரைக் கவனித்தும், கவனிக்காதவர் போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கருதிய மகரிஷி, அவரது மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிவிட்டார். தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று அவரை வழிபட்டு விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள “சத்ய க்ஷேத்ரம்” எனும் இத்தலத்திற்கு சென்று மகாவிஷ்ணுவை வேண்டினால் விமோசனத்திற்கு வழி கிடைக்கும் என்றார் நாரதர். அவரது ஆலோசனைப்படி இங்கு வந்த பிருகு, சக்கரத்தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை எண்ணித் தவம் செய்து வணங்கினார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு குறித்த காலத்தில் விமோசனம் அளித்தார். எனவே இந்த முனிவர், கருவறையில் விஷ்ணுவை வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், வீடு, மனையில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வீடு, கட்டடங்கள் கட்டுவதில் தடை தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகிறார்கள். கோயிலுக்கு முன்பகுதியில் சக்கர தீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இத்தீர்த்தத்தின் மத்தியில்தான் சுவாமி சக்ராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கின்றனர்.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஏகாம்பரேஸ்வரரும், பவளவண்ணரும் எதிரெதிரே பார்த்தவாறு இருக்கின்றனர். பிரகாரத்தில் பிரவாளவல்லி தாயார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.
திருவிழா:
வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனியில் 5 நாட்கள் பவித்ரஉற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி.
பிரார்த்தனை:
சக்கர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்யலாம்.