சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 120வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழகஅரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அனிதா ராமகிருஷ்ணன் உள்பட பல அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 15-7-2022 அன்று (இன்று) காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட காமராஜர், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார்.
விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். Also Read – அதிமுக சாதி ரீதியான கட்சி அல்ல – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். 1964-ம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராஜர், நேருவின் மறைவுக்குப் பின்னர், இந்தியாவின் பிரதமரை 2 முறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
தான் வாழ்ந்த 73 ஆண்டுகளில் 57 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒப்பற்றத் தலைவராகவும் விளங்கினார். தலைவர் கருணாநிதி 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் நாளினை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்தார். அன்னாரின் பிறந்த நாளானது கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் காமராஜரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை பல்லவன் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.