போபால்
மத்திய பிரதேச மாநிலத்தில் அசைவம் உண்போர் மற்றும் மது அருந்துவோர் அர்ச்சகர் ஆக முடியாது என அம்மாநிலமுதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்கள் செய்து வருகிறார். ஆட்சி அமைத்ததும் முதல் பணியாக விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்தார். அதைத் தொடர்ந்து பல திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். வரவுள்ள மக்களவை தேர்தலை மனதில் கொண்டு இந்த அறிவிப்புக்களை அவர் செய்வதாக பாஜக குற்றம் சாட்டினாலும் மக்கள் மத்தியில் இத்திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது மாநிலத்தில் முதல் முறையாக கோவில் அர்ச்சகராக விரும்புவோருக்கான தகுதிகள் குறித்த பட்டியலை மாநில அரசு சார்பில் கமல்நாத் வெளியிட்டுள்ளார்
அந்த தகுதிகள் பட்டியலில், “இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயதுக்கு மேல் ஆகி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். அத்துடன் பூஜை விதிகள் குறித்த பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் சைவம் உண்பவராக இருக்க வேண்டும். மது அருந்தக் கூடாது. எந்த ஒரு குற்றப் பின்னணியும் இருக்கக் கூடாது. கோவில் வளாகத்துக்குள் வர தடை செய்யப்பட்ட எந்தக் குற்றத்தையும் அவர் செய்திருக்கக் கூடாது. கோவில் நிலங்கள் அல்லது எந்த ஒரு சொத்தையும் அபகரித்துள்ளதாக புகார்கள் இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரரின் தந்தை அர்ச்சகர் என்றால் மற்ற விதிகள் சரியாக இருந்தால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மடத்தின் கீழ் வரும் கோவில்களில் அர்ச்சகர் நியமிப்பது சிறப்பு பிரிவின் கீழ் வரும். இந்தக் கோவில்களில் குரு – சீடன் முறை பின்பற்றப்படும். அத்துடன் அனைத்து அர்ச்சகர் நியமிப்பிலும் அர்ச்சகர் குடும்பத்தை செர்ந்தோருக்கும் குரு சிஷ்ய பரம்பரைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். “ என தெரிவிக்கப்பட்டுள்ள்து.