புதுடெல்லி:

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகமும் இணையான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடும் ஆட்சேபனைகளை எழுப்பியது தெரியவந்துள்ளது.


இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே 7.7 பில்லியன் யூரோ ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது, பிரதமர் அலுவலகமும் இணையான பேச்சுவாரத்தை நடத்துவதற்கு பாதுகாப்புத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் குறுக்கீட்டால், இருநாட்டு பாதுகாப்புத் துறை அளவிலான பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதோடு, பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ள இந்திய குழுவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கவனத்துக்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய குழு தவிர, வேறு யாரும் ரஃபேல் பேர பேச்சவார்த்தையில் பங்கு பெறக்கூடாது என்று பிரதமர் அலுவலகத்தை வலியுறுத்தலாம் என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ரஃபேல் பேர பேச்சுவார்த்தையை துணை விமானப் படை தளபதி தலைமையிலான 7 பேர் கொண்ட குழு நடத்தி வருவதாகத் தான் தெரிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகமும் பங்கேற்பதற்கான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், அலுவலக ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் பங்கேற்பதற்கு பாதுகாப்புத் துறை எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது தெரிகிறது.

பாதுகாப்புச் செயலர் மோகன் குமார் அனுப்பிய குறிப்பில், ரஃபேல் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகம் குறுக்கீடு தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல், 7 நபர் குழு நடத்தும் பேச்சுவார்த்தையை முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பேரம் பேச்சுவார்த்தையில் இருக்கும் போதே, கடந்த 2015-ல் பாரீஸ் சென்ற பிரதமர் மோடி, ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

2016-ம் ஆண்டு நடந்த இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது, இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான இடைக்கால ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்பிறகுதான், ரஃபேல் போர் விமான பேரத்தை நடத்தவும், அவற்றை வாங்கவும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு குழுமத்தை பிரதமர் அலுவலகம் நியமித்த விவரத்தை பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே தெரிவித்தார்.

பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர் மற்றும் பிரதமர் அலுவலக இணை செயலர் மட்டத்தில் அளவிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, ஒப்புக்காக இந்திய பேச்சுவார்த்தைக் குழு பிரான்ஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்திருக்கிறது.

பிரதமர் அலுவலகமும் இந்திய பேச்சுவார்த்தை குழுவும் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது, ரஃபேல் பேரத்தில் பிரான்ஸுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திவிட்டது.

மேலும் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவை நிலையை பலவீனப்படுத்திவிட்டது என பாதுகாப்பு அமைச்சகத்தில் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ‘தி இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.