சென்னை

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது.   தற்போது அந்த தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன.   நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய கொள்கைகளில்  வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது ஒன்று ஆகும். இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டுக்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மநீம தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டியிடுகிறது.

நமது மநீம வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் போட்டியிடுகின்றனர்.   மநீம வேட்பாளர்களை ஆதரித்தும்,  உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல் கொடுப்பதற்கும் மநீம தலைவர் கமல்ஹாசன் முதற்கட்ட பிரசார பயணத்தை இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் இருந்து தொடங்குகிறார். அவர் வரும் 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.