சென்னை

தொலைக்காட்சியில் சட்டப்பேரவை  நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கமலஹாசன், “சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமானியனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமெனக் கோரி  2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.

இந்தியப் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.  கேரள சட்டமன்ற நிகழ்வுகள் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.  இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சானலும் உள்ளது. நடைபெற இருக்கும் நிதிநிலை கூட்டத்தொடரில் துறைவாரியான  மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யத் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக் கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது. எனவே இதற்கு ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.