சென்னை:

ட்சியின் பெயரை நேற்று கமல் அறிவித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்து அதிருப்தி நிலவுகிறது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன், “பிப்ரவரி 21ம் தேதி மாநாடு நடத்தி கட்சி பெயரை அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார். இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அறிவித்தபடி பிப். 21 (நேற்று) மதுரையில் மாநாடு நடத்தினார். அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாகக்   கூடினர். அவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கமலின் கட்சிப் பெயரை அறிய ஆவலாக இருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய மாநாட்டில் கட்சியின் பெயராக, “மக்கள் நீதி மய்யம்” என்று அறிவித்தார்.  “இடதுசாரி வலது சாரி இரண்டுக்கும் மய்யமாக செயல்படுவோம்” என்றும் கமல் அறிவித்தார். மய்யம் என்ற பெயரில் அவர் பத்திரிகை நடத்தி வந்தத்தும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பெயர் அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத சில ரசிகர்கள் நம்மிடம் பேசியதில் இருந்து…

“தலைவர் (கமல்) எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவர். அவரது உத்தரவை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுபவர்கள்தான் நாங்கள். கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்து தலைவரின் அறிவிப்பை தெரிந்துகொள்ள அத்தனை ஆர்வத்துடன் மதுரை வந்தோம்.

ஆனால் கட்சியின் பெயரைக் கேட்டவுடன் எங்கள் ஆர்வம் வடிந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சிகளுக்கு “கழகம்” அல்லது “கட்சி” என்று வைப்பேத வழக்கம். அந்த வார்த்தைகள்தான் மக்களிடையே எளிதாக சென்றடையும். ஆனால் “மக்கள் நீதி மய்யம்” என்று வைத்திருப்பது எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே. இந்தப் பெயரை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் சிரமம்.

“கழகம்” என்ற வார்த்தை  தலைவருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆகவே கட்சி என்றாவது பெயர் வைத்திருக்கலாம். அதாவது, “மக்கள் நீதி கட்சி” என்றால் மக்கள் நினைவில் வைத்திருக்க வசதியாக இருக்கும்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய ரசிகர்கள்.

அதே போல, கட்சி கொடி குறித்தும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

“கொடி என்பதை சுவரில் எளிதாக வரையும்படி  இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆறு கரங்கள் கோர்த்திருப்பது போல கொடியில் உள்ளது. இதை வரைவது சிரமம். பிறகு எப்படி மக்களிடம் கொண்டு செல்ல முடியும்”என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

அதோடு, “16 பேரை உயர்மட்டக்குழுவாக அறிவித்துள்ளார் தலைவர். அதில் ஸ்ரீப்ரியா, கமீலா நாசர்,   போன்றவர்கள் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கும் மன்றத்துக்கும் என்ன தொடர்பு?

கமல் மன்றத்தில் இருக்கும் நாங்கள்,  தேர்தலில் ஈடுபட வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள் அல்ல. தலைவர் கமல் யாரைச் சொல்கிறாரோ அவர்களுக்காக உழைத்து அவர்களை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதே நேரம், கட்சி பொறுப்பில் நீண்டகாலமாக மன்றத்தில் சிறப்பாக உழைப்பவர்களுக்கு போதிய இடம் அளிக்க வேண்டும்” என்கிறார்கள்.

கமல் காதுக்கு ரசிகர்களின் ஆதங்கம் நிச்சயம் செல்லும். தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.