பினராயி விஜயன், கெஜ்ரிவால் சந்திப்புக்களை அடுத்து  மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

சமீபகாலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.  தமிழகத்தின் அனைத்துத்துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும் பதிவிட்டார். இதையடுத்து தமிழக அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்தனர்.

இந்த நிலையில் கோவை திருமண விழாவில் பேசிய கமல், தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும்,  கடந்த 1ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார் கமல். அப்போது அவர், பினராயி விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகத் தெரிவித்தார்.

அடுத்ததாக தான் அரசியல் கட்சி தொடங்கும் யோசனையில் இருப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அதிரடியாக பேட்டி அளித்தார்.

சென்னையில் நடந்த விழாவில் பேசிய கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் ரஜினி உடனான கூட்டணி பற்றியும் தெரிவித்தார்.

மம்தா – கமல்

சில நாட்களுக்கு முன், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கமல்ஹாசன் இல்லத்தைத் தேடி வந்து சந்தித்தார். இருவரும் அரசியல் ஆலோசனை செய்ததாக கமல் கூறினார்.

மேலும், ஊழலுக்கு எதிரானவர்கள் தன்னுடைய உறவினர்கள் என்றும்  கூறினார். அதோடு, நூறு நாட்களில் தேர்தல் வந்தால் அரசியலில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாகவும், முதல்வராக விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்கப் போவதாக கமல் தெரிவித்துள்ளார்.

மம்தாவைச் சந்திக்க நேரம் கமல் நேரம் கேட்டதாகவும்,  மம்தாவும் கமல்ஹாசனைச் சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்கில சேனல்களுக்கு பேட்டி அளித்த கமல், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பேசியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் மம்தாவை கமல் சந்திக்க இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.