புலி வாலை பிடித்த நாயர் கதையாகி விட்டது- கமலஹாசன்- நிலை. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அவர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
எதற்கு?
கூட்டணிக்கான ஆட்களை தேடித்தான்.
தொடக்கத்தில் டெல்லி,கொல்கத்தா,திருவனந்தபுரம் என மாநில தலைநகர்களை வலம் வந்து கட்சி தலைவர்களின் ஐடியாக்களை கேட்டது-ஆரோக்கியமான விஷயம் தான்.
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில்-மக்களை சந்திப்பதை விடுத்து கல்லுரி-கல்லூரியாக போய் , பிரசங்கம் செய்வது என்ன அரசியல் சாணக்கியத்தனம் என்று தெரியவில்லை. –
ரஜினிகாந்த்துக்கு நிகராக வெள்ளித்திரையில் அவர் வசூல் சக்கரவர்த்தி தான்.ஆனால் மக்கள் செல்வாக்கில்? நிச்சயம் இல்லை என்பது அவருக்கே தெரியும்..
1996 ஆம் ஆண்டில் ரஜினி தன்னை நிரூபித்துள்ளார். ஜி.கே.மூப்பனார் –த.மா.கா..என்ற கட்சியை தொடங்கியதன் பின்னணியில் இருந்தவர் ரஜினி.
‘இவரது ஆதரவில் தான் அப்போது நடந்த தேர்தலில்; கருணாநிதியும், மூப்பனாரும் –இரும்பு மனுஷி ஜெயலலிதாவை தோற்கடிக்க முடிந்தது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வர்.
சினிமாவில் சமரசங்கள் தேவை இல்லை ஆனால் அரசியலில் சமரசம் இல்லாமல் குப்பை கொட்ட முடியாது என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கக்கூடும்.
அதனால் தான் –தனது கட்சியில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட –தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம் என்கிற அபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கட்சி ஆரம்பிப்பதே –வெற்றியை நோக்கிய இலக்கை எட்டுவதற்குத்தான். சர்வ கட்சி தலைவர் களையும் திட்டித்தீர்த்து –அவர்களில் யாருமே இவருடன் கூட்டு வைக்க விரும்பாத சூழலை உருவாக்கி விட்டார். அத்திப்பூத்தாற்போல் வந்த பாரி வேந்தரும் ‘தொடர்பு எல்லைக்கு வெளியே ‘சென்று விட்டார்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் , ஸ்டாலின் என பலரையும் ஒரு சேர பகைத்துக்கொண்ட கமல்– ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. அதை மறந்து விட்டு அவரிடம் ஆதரவு கோருவது அசிங்கம் இல்லையா?தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக சி.பி.எம்., ஆம் ஆத்மி கட்சிகள்- பலமான கூட்டணியை கட்டமைத்துக்கொண்டிருக்க –அவர்களிடம் ஆதரவு கேட்பது- எந்த ஊர் அரசியல்?
கடந்த சட்டசபை தேர்தலில் டெபாசிட் இழந்தவர்தான் விஜயகாந்த். எனினும் டெல்லி மந்திரி, உள்ளூர் எதிர்க்கட்சி தலைவர் என பல பேர் அவரை சுற்றி வருவது ஏன்?
looking for paddles to jump into the sea ..
கடந்த தேர்தல்களில் விஜயகாந்த் – தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.
இன்றைக்கும் பல தொகுதிகளில் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தே.மு.தி.க.உள்ளது.இதனால் தான் அவருக்கு கிராக்கி.
தனித்து நின்று கமலஹாசனும் –தனது பலத்தை காட்டினால் நாளை அவரும்- விஜயகாந்த் ஆகலாம்.
அதை விடுத்து தேர்தல் களத்தில் குதித்து விட்டு- தோழமைகளை தேடுவது –முதிர்ச்சி அல்ல.
–பாப்பாங்குளம் பாரதி