பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை அதிகாரத்துடன் சொல்ல ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல என்றும் விஜயேந்திரா கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் கன்ன அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. சமூக வலைதளங்களிலும் கமல்ஹாசனுக்கு கன்னர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கமல்ஹாசன் ஒரு ‘பண்பாடற்றவர்’ என்று கூறியதுன், அவர் கன்னட மொழி குறித்து பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசன் பேச்சு கர்நாடக மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே காவிரி பிரச்சினை, மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், தற்போது கமல்ஹாசனின் கன்னடம் குறித்த பேச்சு மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட நிகழ்ச்சியான ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 5ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் போஸ்டர்களை கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கிழித்து வருகிறார்கள். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா என அழைக்கப்படும் சிவராஜ் குமார் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது “சிவண்ணாவுக்கு நன்றி. நான் அவருடைய சித்தப்பா போன்றவன், ஆனால் அவரது பெயரே சிவண்ணா என்பதால், நான் என் சகோதரர் என்று அழைக்கிறேன். . அவர் கன்னட சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால், கன்னட பிரதிநிதியாக, ரசிகராக இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்” என்று சிலாகித்து பேசினார். மேலும், இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.
இந்த பேச்சானது கர்நாடக மாநிலத்தில், சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக ரக்ஷண வேதிகே (பிரவீன் ஷெட்டி பிரிவு) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசனக்கு எச்சரிலக்கை விடுத்துள்ள இந்த அமைப்பு, நீங்கள் (கமல்ஹாசன்) கர்நாடகாவில் வியாபாரம் செய்து உங்கள் திரைப்படங்களைக் காட்ட விரும்புகிறீர்கள், கன்னடர்களையும் கன்னடர்களையும் அவமதிப்பதை நிறுத்துங்கள். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்த நீங்கள் இங்கு வந்தீர்கள், ஆனால் கர்நாடக ரக்ஷண வேதிகே உங்கள் முகத்தில் கறுப்பை பூச அங்கு வருவதற்கு முன்பே வெளியேறிவிட்டீர்கள்,” என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கமல்ஹாசனுக்கு கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தாய்மொழியை மகிமைப்படுத்தும் முயற்சியில் கன்னடத்தை “அவமரியாதை” செய்ததுள்ளதாக கூறியவர், “கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் @ikamalhaasan, கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம்” என்றும், இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக கன்னடம் ஒரு முக்கிய மொழியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார்.
“தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை கொண்டு வருபவர் என்று கூறப்படும் கமல்ஹாசன், தனது செயலுடக்காக “கன்னடர்களிடம் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை அதிகாரத்துடன் சொல்ல ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல என்று விமர்சித்துள்ள விஜயேந்திரா, “இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது. கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்கள் என்று வரும்போது ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ய மாட்டார்கள் என்பதை கமல்ஹாசனுக்கு நினைவூட்டுவோம்,” என்று எச்சரித்துள்ளார்.
கமல்ஹாசனின் பேச்சுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக தக் லைஃப் படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் எங்கு எல்லாம் ஒட்டப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் படத்திற்காக விளம்பரத் தட்டிகள் வைக்கப் பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் கிழித்து வருகிறார்கள். மேலும் கமல்ஹாசனுக்கு எதிராகவும் கன்னட அமைப்பினர் கோஷமிட்டு வருகிறார்கள். குறிப்பாக கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவை அவமதித்தால் கமல்ஹாசனின் படங்களுக்கு தடை விதிக்கப்படும்” என்றும், “கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களிலும் கன்னட அமைப்புகளை சேர்ந்த பலர் கமல்ஹாசனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.