கோவை: என்னை துக்கடா அரசியல்வாதி என கூறும் கமல்ஹாசன் முதிர்ச்சியற்றவர் என்று கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.
கோவை தெற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில கமல்ஹாசன், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர். அங்கு அரசியல் களம் தகதக வெனி தகித்து வருகிறது.
சமீபத்தில் அங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `கமல்ஹாசன் வானதியுடன் நேரடியாக விவாதம் செய்ய தயாரா?’ என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் தெரிவித்த கமல்ஹாசன், வானதியை ‘துக்கடா அரசியல்வாதி’ என்று விமர்சித்தார். இது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டு காலமாக பாஜகவில் பணியாற்றி வரும் வானதியை, சமீபத்தில் அரசியலுக்கு வந்த கமல் துக்கடா அரசியல்வாதி என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கடுமையாக கமல்ஹாசனை விமர்சித்து வரும் வானதி, என்னோட வேலைகளை ஒப்பிடும்போது, சமூகத்துக்கும் கட்சிக்கும் நான் நிறைய பங்காற்றியிருக்கேன். துக்கடா அப்படீன்னா, சின்ன சைஸ்னு அர்த்தமா..? எனக்கு அதுக்கு சரியான அர்த்தம் என்னனு தெரியலை. கடந்த 5 வருஷத்துல நான் இந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கேன் அப்படீன்னு பட்டியல் போட்டு எடுத்துக் காண்பிக்கத் தயார். அதேபோல, அவர் இந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கார் அப்படீங்கிறதை சொல்லிட்டு, என்னை துக்கடானு சொல்லட்டும் என சவால் விடுத்தார்.
பல்வேறு பிரச்னைகளைத் தாண்டித்தான் பெண்கள் அரசியலுக்குள் நுழைந்து, பல சவால்களைக் கடந்து உயர்ந்து நிற்கின்றனர். நானும் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, கடுமையான முயற்சியால் வழக்கறிருக்கு படித்து, 2016-க்கு அப்புறம் முழு நேரமா அரசியலுக்கு, இந்தப் பகுதி மக்களுக்காக உழைச்சுட்டு இருக்கேன். மிகப்பெரிய கட்சியில், அகில இந்திய மகளிரணி தலைவராக இருக்கும் பெண் அரசியல்வாதியை, துக்கடா அரசியல்வாதி என்று கூறியிருப்பது, , பெண்களுக்கு அவர்கள் கட்சியில் எந்தளவுக்கு மரியாதைத் தருகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்தக் கருத்துகள் மூலம் பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் செய்ய நினைக்கிறார், போட்டியாளராக நிற்கிற பெண்ணை இப்படித்தான் பேசுவீர்களா, இது உங்கள் தரத்தைக் காட்டவில்லையா? எ இது அவரின் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி உள்ளது என்றார்.
சென்னையில் இருந்துகொண்டு, கோவையில் போட்டியிட கமல் வந்ததைத்தான் அவரை விருந்தாளி என்று சொன்னேன். அது ஒன்றும் கேவலமான வார்த்தை இல்லையே என்றவர், பொதுவெளியில் பெண்களை அவமரியாதை செய்கிற விஷயங்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. அது பாஜகவை சேர்ந்த ராதாரவி உள்பட யாராக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.