சென்னை:
மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். இன்று மாலை அல்லது இரவு அவரை சந்திக்கும் கமல், தேர்தல் நிலவரம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென மேற்கு வங்காளம் புறப்பட்டுச் சென்றார்.
கமல்ஹாசன் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்திய நிலையில், மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார்.
கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியபிறகு, ஏற்கனவே 2 முறை மம்தாவை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ள நிலையில், தற்போது 3வது முறையாக மம்தாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் தற்போதைய அரசியல் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.