மதுரை:
துரையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், 4 இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று (13-ந்தேதி) மதுரையில் தொடங்குகிறார். அவர் தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வருகிற 16-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

கமல்ஹாசன் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு அவர் காரில் புறப்பட்டு அவனியாபுரம் வழியாக பசுமலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார். வழியில் 2 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த கமல்ஹாசன் பிற்பகல் 3.30 மணி அளவில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

பசுமலையில் இருந்து புறப்படும் கமல்ஹாசன் பெரியார் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் பேசுகிறார். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் மேல மாசிவீதி-வடக்கு மாசிவீதி சந்திப்பில் பேசுகிறார். மாலை 4.30 மணிக்கு காமராஜர் ரோட்டில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தெப்பக்குளம் வழியாக அண்ணாநகர் சென்று அங்குள்ள அம்பிகா தியேட்டர் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு ஒத்தக்கடை பகுதியிலும் கமல்ஹாசன் பேசுகிறார்.

இரவு 8 மணிக்கு கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

பின்னர் அவர் மீண்டும் பசுமலையில் உள்ள ஓட்டலுக்கு வந்து இரவு தங்குகிறார்.

2-வது நாளாக நாளை (14-ந்தேதி) கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். நாளை காலை மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள ஓட்டலில் வணிகர்கள், வர்த்தக சங்கத்தினர், தொழில் அதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை காலை 10 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்கும் கமலஹாசன் அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி, தேனியில் நடைபெறும் கூட்டங்களில் பேசுகிறார். தேனியில் மக்கள் நீதிமய்ய கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பெரியகுளம், வத்தலக்குண்டு, செம்பட்டி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.

அதன்பின் திண்டுக்கல் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகளை கேட்டறிகிறார். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தற்போது நிலவி வரும் மக்கள் பிரச்சினைகள், குறைகள் பல வருடங்களாக தீர்க்கப் படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டு அதற்கான தீர்வு களை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசவும் முடிவு செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 15-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இதேபோன்று உள்ளரங்க கூட்டங்களில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

இந்த மாவட்டங்களிலும் திறந்த வேனில் சென்று முக்கிய இடங்களில் தெருமுனை கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

கடைசி நாளான 16-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரத்தை மேற்கொள்ளும் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். கடைசியாக அவர் மீனவர்களை சந்தித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

கமல்ஹாசனை வரவேற்று மதுரை மாநகர் முழுவதும் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பிரசாரம் செய்யும் இடங்களில் கட்சி கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.