சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எழும்பூர் மருத்துவமனைக்கு நீர் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கனிர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.
மூத்த நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மேலும், கமல் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரத்தை கமல்ஹாசன் தனது பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசனுடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இது என் பிறந்தநாள் என்பதை விட, முக்கியமான ஒரு நல்ல நாள். இதில் அரசியல் ஆதாயம் கடந்து மனித நேயம் சம்பந்தப்பட்டது. நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா. மனிதம் சார்ந்து, நான் உள்பட அமைச்சர்கள் வந்துள்ளோம்.
தற்போது குழந்தைகள் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள தண்ணீர் தயாரிக்கும் வாயு ஜெல் இயந்திரமான, இந்தியாவில் உள்ள ஐஐடியில் செய்தது.. இந்த வாயு ஜெல் (தண்ணீர் தயாரிக்கும் இயந்திரம்) என்ற இயந்திரத்தை ராஜ் கமல் நிறுவனத்தில் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இதை பயன்படுத்தலாம். தற்போது இதை செய்வதால், இதைப் பார்த்து பயன்படுத்தி, அனைத்து மருத்துவமனையிலும் என்னைப் போன்றவர்கள் அரசுக்கு கை கோர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
இந்த ஏற்பாடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றுள்ளது. இது போன்ற இயந்திரம் உள்ளது என்று அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில், முன் முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.
இந்த நிகழ்வை திமுகவின் கூட்டணிக்கான அச்சாணியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு, நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம்தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது. எங்களுக்கு தனிக்கட்சி இருக்கிறது. இதில் அரசியல் இல்லை” என தெரிவித்தார்.