மன்னார்குடி:

மல்ஹாசனின் இந்து தீவிரவாதம் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசினார்,  தமிழகத்தில் கமல்ஹாசன் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன்,  அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மன்னார்குடி ஜீயர்

இதுதொடர்பாக பாரதியஜனதா கட்சி உள்பட இந்து அமைப்புகள் கமல்ஹாசன் மீது புகார்கள் கூறி உள்ளன. அவருக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு  செய்துள்ளன. கமலின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது.  பா.ஜனதா சார்பில் அவரது கட்சிக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கடந்த 2 நாட்களாக வீட்டில் முடங்கிய கமல்ஹாசன் இன்று பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் பிரசாரத்திற்காக சென்றுள்ளார். அவர்மீது இந்த அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அங்கும் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கக்ம் வந்த மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழக கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், கமலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜீயர்,  மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றது அவரது தேசபக்தியை காட்டுகிறது. அதாவது பிரிவினைவாதத்திற்கு எதிராக அவர் வைத்திருந்த தேச பக்தி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான்.

ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு கமல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  அவரது கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றவர், இதுபோன்று இந்துக்கள் குறித்து  சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் கமலஹாசனை  நடமாட விடமாட்டோம் என்று எச்சரிக்கைவிடுத்தார்.

கமல்ஹாசன் மட்டுமல்ல, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம். கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்க கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.