சென்னை: உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட ஒருவரை, அலேக்காக தோளில் தூக்கிச்சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடப்பதால், சென்னையில் கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஒருவர் அதிக அளவில் மதுஅருந்திவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைகண்ட மற்றவர்கள், அவர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், அந்த இளைஞன் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது தோளில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதநேய செலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பாராடு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ‘சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
அதுபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டில், “சென்னை மாநகரத்தின் காவல் ஆய்வாளர் ஸ்ரீமதி ராஜேஸ்வரி அவர்கள் இந்த இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் தக்க நேரத்தில் சேர்ப்பதற்கு உதவியிருக்கிறார்! காக்கி உடையின் கம்பீரத்தையும், அவர் மனதில் இருக்கின்ற அன்பின் ஈரத்தையும் அவருடைய செயல் வெளிப்படுத்துகிறது. வாழ்க அவருடைய சேவை”,என்று பாராட்டியுள்ளார்.