அரவக்குறிச்சி:

மத மோதலை தூண்டியதா மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமலஹாசன், காந்தியை நாதுரான் கோட்சே கொலை செய்ததன் மூலம், இந்தியாவின் முதல்  இந்து தீவிரவாதிதான் என்று கூறியிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில், மதமோதலை தூண்டும் விதமாக பேசியதாக கமலஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்து முன்னணி கொடுத்த புகாரின் அடிப்டையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமலஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுரான் கோட்சே இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று பேசினார்.

இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ) மற்றும் 295 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் புகாரின் அடிப்படையில் கமலஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறி பேசுவோர், மதம், இனம், மொழி,சாதி, சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, மத உணர்வை புண்படுத்திவிட்டதாக டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் கமலஹாசன் மீது இந்து சேனா அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 16-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.