மீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், ““பெண்ணை வைத்து சூதாடிய கதையை புத்தகமாக எழுதி அதை படித்தவர்கள் நாம்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர், “மகாபாரத்தை கொச்சைப்படுத்திவிட்டார் கமல்ஹாசன்” என்று கூறி அவரது உருவபொம்மையை எரித்தனர். மேலும், “மத உணர்வுகளை புண்படுத்தும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலத்திலும் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் தலைவர் அர்ஜூன் சம்பத்தை தொடர்புகொண்டு, “கமல் மீதான உங்களது புகார், அவரது கருத்துரிமையை பறிக்கும் செயல் ஆகாதா” என்று கேட்டோம்.

(விஸ்வரூபம் படத்தில்) கமல் – அர்ஜூன் சம்பத்

அதற்கு அர்ஜூன் சம்பத் அளித்த பதில்:

“கருத்துரிமையை நாங்களும் மதிக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் கருத்துரிமையை இந்துக்களான நாங்கள்தான் மதிக்கிறோம்.

“வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது சரியா, தவறா” என்று கோயில்களிலேயே பட்டிமன்றம் வைத்து விவாதிப்பவர்கள் இந்துக்கள்.

ஆக கருத்துரிமைக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாகத்தான் இருக்கிறோம். இருப்போம். ஆனால், நாங்கள் வழிபடும் மத்தை, புராணத்தை கொச்சைப்படுத்துவதை எப்படி கருத்துரிமை என்று சொல்ல முடியும்?

தவிர, இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருப்பதுதான் கருத்துரிமையா?

இஸ்லாமியர்களின் குரானையோ, கிறிஸ்துவர்களின் பைபிளையோ இவர் கருத்துரிமை என்ற பெயரில் விமர்சித்துவிட முடியுமா?

இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி சாதாரணமாக ஒரு படம் எடுத்தார். அதற்கே அவர்களிடமிருந்து எத்தனை எதிர்ப்பு. பயந்துகொண்டு நாட்டைவிட்டே ஓடிவிடுவதாக அழுது புலம்பியவர்தானே இந்த கமல்ஹாசன். இப்போதுகூட அது பற்றி பேச பயப்படுகிறவர்தானே கமலஹாசன்?

ஆனால் இந்துக்கள் மனதைப் புண்படுத்தம்படி பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பில் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவாரா?

இதன் பெயர் தைரியம் அல்ல.. கோழைத்தனம்தான்” என்றவர், “திடீரென இவர் திராவிடம் அது இது என்று பேசுகிறார். இது பச்சை வியாபாரத்தனம். திராவிடத்துக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? பாரதியாரை பின்பற்றுபவருக்கு, பாரதி தாசனுடன் என்ன நெருக்கம்?

பார்ப்பனீய எதிர்ப்பு உணர்வில் சிக்கிக்கொள்ளாமல், தனது சினிமா வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக திராவிடம் என்றெல்லாம் பேசுகிறார் கமல்” என்று ஆவேசத்துடன் பேசிய அர்ஜூன் சம்பத், “தற்போது அவர் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதே நேரம் கமல் தொடர்ந்து இப்படி பேசி வந்தால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று ஆவேசத்துடன் சொல்லி முடித்தார் அர்ஜூன் சம்பத்.