மீபகாலமாகவே அரசியல் விவகாரங்கள் குறித்து சூடாகவும், சுவையாகவும், புரிந்தும், புரியாமலும் கமல் ட்விட்டி வந்தார்.  அவரது ட்விட்டுகளை எப்படி புரிந்துகொண்டார்களோ.. ஆளுங்கட்சி தரப்பில் கமல் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

அமைச்சர்களில் இருந்து நாஞ்சில் சம்பத் வரை, கமலை கடித்துக் குதறினார்கள். அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை பிரமுகரை (ஜல்லிக்கட்டு விவகாரத்தைச் சொல்லி) கைது செய்தது ஆளுங்கட்சி.. அல்லது ஆளும் அரசு. இது கமலை கடுப்பேற்றியது.  தொடர்ந்து  தமிழக ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை ட்விட்டரில் விமர்சித்து வந்தார். தொடர்ந்து ட்விட்டுவதோடு நிறுத்திக்கொள்ளவே அவர் நினைத்தார்.

இந்த நிலையில்தான் கமலை விமர்சித்து ஆளுங்கட்சி நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் ஒரு கவிதை(!) இடம்பெற்றது.

 

மிகமும் தரம்தாழ்ந்த வார்த்தைகளுடன் இருந்தது அந்த கவிதை.

“சகலகலா சண்டாளனே என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த அதில், “டுவிட்டரில் நித்தம் புலம்பும் துஷ்டனே! மகளின் எதிர்காலம் கருதியே விலகுகிறேன் என கவுதமியும் தப்பி ஓடிவிட, அடுத்ததாக அஷ்டமி-நவமியாவது அகப்படுமா என காத்துக் கிடக்கும் கடுப்பில் கழகத்திடம் எரிந்துவிழும் காதல் கிழவரசனே! காமக்கொடூரனே!” என்றெல்லாம் போனது அந்த கவிதை.

இதுதான் கமலை ரொம்பவே சீண்டிவிட்டதாம். அதனால்தான் ட்விட்டரோடு நின்றுவிடாமல், ஏதேனும் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.

இதையடுத்தே சமீபத்திய தொலைக்காட்சி பேட்டியாம்.