அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம்.

புதுக்கோட்டை வழியில் அறந்தாங்கி வந்து காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி மேற்கே சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம்.

கோயில் பெருமைகள்

மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க கல்யாணராமரை வழிபாடு செய்கின்றனர் நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடகதோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது

இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் ராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

சனி பிஷ்ட ஆஞ்சநேயர்: சீதையை மீட்கும்போது ராவணனுடன் ஏற்பட்ட போரில் லட்சுமணன் மயக்கமடைந்து விட்டார். அவருக்கு மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவிமலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார். மலையை எடுத்து வரும் வழியில், சனிபகவான் ஆஞ்சநேயரிடம், உன்னை பிடிக்க வேண்டிய கால கட்டம் வந்ததால், உன்னுடைய சரீரத்தை (உடம்பை) பிடிக்க அனுமதிக்க வேண்டும், என்றார். தன்னுடைய காலை பிடித்து கொள் என்று ஆஞ்சநேயர் கூறியதால் அவருடைய காலை சனிபகவான் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.

உளுந்து பிரசாதம்: இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது விக்ரகத்தை கோயிலில் வழங்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சந்தான கிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார்

சிறப்புகள்

ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.

கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது சிறப்பு