‘கள்ளழகர்’ படத்தின் மூலம் எனது வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் விஜயகாந்த் என்று பிரபல நடிகர் சோனு சூட் உருக்கமாக கூறியுள்ளார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம்வந்த விஜயகாந்த் தனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல இளம் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.

மேலும், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் நண்பர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து உடன்பிறந்த சகோதரர்களாய் தனது மிகப்பெரிய குடும்ப உறவினர்கள் அனைவரையும் அரவணைத்து சென்றவர்.

தவிர, நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்காக உதவிக்கரம் நீட்டியதோடு அவர்களின் எதிர்காலத்திற்கும் வழி ஏற்படுத்தியவர்.

தேமுதிக என்ற கட்சியைச் தொடங்கி சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.

மக்களின் அன்புக்கு பாத்திரமான விஜயகாந்த் மறைவை அடுத்து திரையுலகினர் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரபல நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்த் குறித்து பதிவிட்டுள்ளதாவது, “எனது புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு கள்ளழகர் படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி எனது திரையுலக பயணத்தை துவக்கி வைத்தவர் விஜயகாந்த்”

“அவரது மறைவு எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.