கள்ளக்குறிச்சி: மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலவரம் நடத்த இடத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பாது பெற்றோர்கள் தரப்பில் பள்ளியை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பள்ளிக்கூடம் தீவைத்து எரித்து சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . இதனை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக அவர்கள் இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் உத்தரவின் பேரில் அங்கு செல்கிறோம். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம். பள்ளி விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இன்று மதியம் கலவரம் ஏற்பட்ட கள்ளக்குறிச்சி சின்னசேலம் பள்ளியில் ஆய்வு செய்தனர். கனியாமூர் தனியார் பள்ளியில் சேதப்படுத்தப்பட்ட வகுப்பறைகள், தீ வைக்கப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு கூடிய பொதுமக்கள், பள்ளியை மீண்டும் இயக்க அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எங்கள் பகுதி மாணவர்கள், பாடம் நடத்த ஏதுவாக கனியாமூர் தனியார் பள்ளியை விரைவில் தொடங்க வேண்டும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேஷன் ஆகியோரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மீண்டும் அதே பள்ளியில் தங்கள் படிப்பை தொடர வேண்டும். தனியார் பள்ளியை சீரமைக்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.