சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுமீது  சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

ஏற்கனவே கடந்த விசாரணையின்போது, அவர்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள், இதுகுறித்து காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு, 29ந்தேதி ஜாமின் குறித்து முடிவு அறிக்கப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதி, மாணவ-மாணவிகளை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம். மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது – நீதிமன்றம். ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் 5 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்குவதாக அறிவித்தார்.

அதன்படி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது.