சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்கிறார். இதை நேற்றைய அமர்வில் அறிவித்தார்.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில்  கடந்த (ஜூன்) 18, 19 ஆம் தேதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்தல் 65க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பின்னணியில் ஆளும் கட்சியினரே செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தி வருகின்றன. மேலும் முழு மதுவிலக்கு அறிக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன. போதைப் பொருள் விற்பனை களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் ‘தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937’-ல் திருத்த மசோதா ஒன்று  இன்று  சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.