சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும்,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில், அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால்,   சட்டப்பேரவையில் அமளி  ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை  சபாநாயகர் அவைக்காவலர்கள் மற்றும் காவல்துறையினரை கொண்டு குண்டுகட்டாக தூக்கி வெளியேற்ற்றினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 50ஆக உயர்ந்துள்ளது. இந்த சாராயத்தை விற்பனை செய்தது திமுகவினர் என்பதால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.  மேலும் இன்றைய கூட்டத்தொடரின்போது, அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கருப்புசட்டை அணிந்து வருகை தந்தனர்.

இன்று காலை கூட்டம்தொடர் தொடங்கியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கள்ளக்குறிச்சி விஷயம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர், பாஜகவினர், பாமகவினர் எழுந்து  கேள்வி எழுப்பினர். இதற்கு திமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் அமளி நிலவியது.

இதையடுத்து,  சபாநாயகர் அப்பாவு அமளியில் ஈடுபடுபவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் அதை அவர்கள் கேட்காமல் அமளியில் ஈடுபடுகின்றனர். கேள்வி நேரம் முடித்துவிட்டு நேரமில்லா நேரத்தில் முதல்வர் விவரிப்பார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால் கள்ளக்குறிச்சி விஷயமே முக்கியம் கேள்வி நேரம் முக்கியம் இல்லை என எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  அமைதி காக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை எதிர்க்கட்சிகள் கேட்காத நிலையில்,  அமளியில் ஈடுபடுபவர்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவைக்குள் புகுந்த அவைக்காவல்கள் உள்பட காவல்துறையினர், அமளியில் ஈடுபட்ட அதிமுக, பாமக, பாஜகவினரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். ,இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.