சென்னை: சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பல கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அதனால் இன்றைய கூட்டம் கலகலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரைவை கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதங்களுக்கான ஜுன் 20ந்தேதி தொடங்கியது. நேற்றைய முதல்நாள் கூட்டத்தில் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 2வது நாள் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, கள்ளச்சாராய விற்பனை செய்தது திமுகவினர் என்பது தெரிய வந்துள்ள நிலையில்,  கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என இபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  நேற்றே இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் மாணிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில், சட்டபேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். விஷ சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று வன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தனர். அதுபோல காங்கிரஸ் கட்சி சார்பிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

விஷச் சாராய விவகாரம்  தொடர்பாக  பா.ஜ.க. கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வந்துள்ளது.   தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை முழுவதுமாக தடை செய்வது குறித்து விவாதிக்க கோரிக்கை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

முன்னதாக அதிமுக எம்எல்ஏக்களும் அக்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, பேரவையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.