விழுப்புரம்: வடக்கு மண்டலம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டையில் 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோல, வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கும் வகையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 33 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலியாக வடக்கு மண்டலத்தில் மட்டும் 466 சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்து பெண்கள் உட்பட 67 பேர் உயிரிழந்தனர். பலர் கண்பார்வைகள் இழந்தனர். இந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, க ள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அதிடியாக மாற்றப்பட்டனர். மேலும், கள்ளச்சாராய விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்ததார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான அதிரடி வேட்டை நடத்தில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டது. பல லட்சம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் (ஜுன்) நடைபெற்ற சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை தொடரின்போது, , தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தையும் முதல்வர் கொண்டு வந்தார். அதன்படி இனி கள்ளச்சாராயம் குடித்து யாரேனும் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட சாராயத்தை விற்பனை செய்யும் நபர் மற்றும் காய்ச்சும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மதுவிலக்கிற்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டது.
இந்த சலசலப்புக்கு மத்தியிலும், வடக்கு தமிழகமான, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றதும், அதை குடித்து சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். . அவரது தலைமையில், வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து மதுவிலக்கு அமலாக்கத்துறை செய்து வருகிறது.
போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக பல அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக வடக்கு மண்டலத்தில் உள்ள கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் நேரில் சென்று மதுவிலக்கு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து அதிரடி வேட்டை நடத்தினர். அதில் கள்ளச்சாராய வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். சாராய ஊரல்களும் அழிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளின் 466 வங்கி கணக்குகள் முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 98 வியாபாரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 12 சாராய வியாபாரிகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அதோடு இல்லாமல் கள்ளச்சாராய வியாபாரிகளின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் முடக்க ஏதுவாக கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக வடக்கு மண்டலத்தில் நீடித்து வந்த கள்ளச்சாராம் விற்பனை மற்றும் காய்ச்சுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அஸ்ரா கார்க் தெற்கு மண்டல ஐஜியாக பணியில் இருந்த போது தான், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல்கள் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. போதை பொருட்களுக்கு எதிரான அஸ்ராகார்க் எடுத்த சிறப்பான பணியை மதுரை உயர் நீதிமன்ற கிளையும் பாராட்டி யுள்ளது. போதை பொளுக்கு எதிரான சிறப்பான நடவடிக்கை எடுத்ததால் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
அதன்பிறகு சென்னை பெருநகர காவல்துறையில் கஞ்சா போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். இவரது சிறப்பான நடவடிக்கையால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இருந்து ரயில்கள் மற்றும் சரக்கு வாரங்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டது. அதோடு இல்லாமல் உற்பத்தி செய்யப்படும் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று போலீசார் கஞ்சா வியாபாரிகள் கைது செய்தும் மற்றும் கஞ்சா ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில், மலைப் பகுதிகள் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் அதிகாரிகள், காவலா்கள் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தொடா் சோதனையில் பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதுடன், பல நூறு லிட்டா் கள்ளச்சாராய ஊறல், சாராயம் ஆகியவையும் அழிக்கப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக, கடந்த ஒரு வார காலமாக காவல் அதிகாரிகள், காவலா்கள் பல்வேறு குழுக்களாக சாத்கா் மலைப் பகுதியில் உள்ள கங்காசரம், நிம்பகாணாறு, பூங்குளம் மலைப் பகுதியில் செம்மநேறி, சிவனகிரி காட்டுப்பகுதி, அல்லேரி மலைப் பகுதியில் அவுச்சாரி ஓடை, மாமரத்து ஓடை, பீஞ்சமந்தை மலைப்பகுதியில் தேக்குமரத்தூா், முள்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, ட்ரோன்களை பயன்படுத்தியும் மலைப்பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளின் அடிப்படையில் வேலூா் மாவட்டத்தில் எவ்வித கள்ளச்சாராய ஊறலோ, கள்ளச் சாராயமோ காய்ச்சப்படாமல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், விற்பவா், கடத்துபவா்களை தடுக்க கள்ளச்சாராயம், கள்ள மது விற்பனை செய்து கைது செய்யப்படுபவா்கள் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 33 சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோா் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்படுவதுடன், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.