சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு 55ஐ தாண்டி உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தி மக்களை குடிகாரர்களாகி வரும் நிலையில், மிற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனையும் கொடிகட்டி பறக்கிறது. குறைந்த விலையில் அதிக கிக்குடன்  சாராயம் விற்பனை செய்யப்படுவதால் கள்ளச்சாராயத்துக்கு பல இடங்களில் கிராக்கி உள்ளது. அதனால், இதுபோன்ற சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களே செய்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் மாமுலை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதன் எதிரொலி, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு சம்பவம். இந்த சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில், திமுக அரசுக்கு கடுமையான தர்மசங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுடன் உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த இரு நாட்களாக மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை  நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக, வேலூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் ட்ரோன் மூலமாக சோதனை மேற்கொண்டு, கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர். கல்வராயன் மலைத்தொடரான ஜவ்வாது மலையில் சோதனை நடத்திய போலீசார், பேரனாம்பட்டு சத்கர் மலைப் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டறிந்து அழித்தனர்

அதன்படி, இதுவரை 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன்,  861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 657 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு வடக்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், மாநிலம் முழுவதும் தொடர்ந்து கள்ளச்சாராய வேட்டை நடைபெறும் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: 4 நாட்களுக்கு பிறகு வாய் திறந்தார் நடிகர் சூர்யா..!