தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், கலைப்புலி தாணு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவுகளும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலை நோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்புநிலை மக்களுக்காக நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும் சந்ததிகளையும் தேக பலம் மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அள்ளித்தரும். உங்கள் தர்மசிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக 10 லட்சம் ரூபாயை இணைத்துள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.