மதுரை: ‘ கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது’ என தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்து உள்ளது.

தமிழ்நாட்டில் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி வழங்கப்படுவதாகவும், அதை திரும்ப பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம், இசை, ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு கலைகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுப்பட்டு வருகிறது.  மேலும் ஆண்டுக்கு ஒருமுறை, கலையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். அதன்படி,   கடந்த 2019, 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் 2021ல்  மொத்தமாக கொடுக்கப்பட்டது. அப்போது அவசகதியில் தகுதியில்லாத சிலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. பலருக்கு கலைமாமணி  சான்றிதழில் உறுப்பினர், செயலர் கையெழுத்து கூட இல்லாமல் சான்று கொடுக்கப்பட்டது இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த   உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கலைமாமணி விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கபடுகிறது? எவ்வாறு இவர்களை தேர்வு செய்கிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பினர். இரண்டு படங்களில் நடித்தால் விருது கொடுப்பதுதான் தகுதியா என கேள்வி எழுப்பியதுடன்,  கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது, இதுதான் இயல் இசை நாடகத்துறை செயல்பாடா எனன கடுமையாக  விமர்சனம் செய்தனர்.

மேலும் கலைமாமணி, விருதுக்கான மரியாதையே இல்லாமல் போய் விட்டது. சாதனையாளர்களுக்கு பதில் 2 படங்களில் நடித்தாலே விருது வழங்கப்படுகிறது என்று கூறியதுடன், கடந்த ஆண்டு (2021)  விருது வழங்கியவர்கள், தற்போது விருது வழங்கப்பட உள்ளவர்கள் குறித்து தமிழக சுற்றுலா, கலைத்துறை செயலாளர் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.