சென்னை: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” என பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் கூறி உள்ளார். இது கலைஞர் பாணி என்றும், கலைஞர் உயிரோடு இருக்கும்வரை அவர்தான் தலைவராக இருந்தார் என்று சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் அன்புமணி செய்வதறியாமல் விழிபிதுங்கி திகைத்துபோய் உள்ளார்.
மேலும், வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் கேட்கும் போராட்டம் தமிழ்நாடு தாங்காத அளவுக்கு போராட்டம் இருக்கும் என்றும் எச்சரித்தார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை மகனுக்கு இடையேயான மோதல், பாமக கட்சியை அடியோடு அழியும் நிலயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நாடத் தொடங்கி உள்ளனர். இதனால் பாமக கூடாராம் விரைவில் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” என மீண்டும் கூறி உள்ளார். ஆனால், அதை ஏற்க மறுக்கும் அன்புமணி, பாமகவின் தலைவர் தான் என கூறி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தன்னை பிரபலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மீண்டும், சாகும்வரை நான் தான் கட்சி தலைவர், அன்புமணி வேண்டுமென்றால் செயல் தலைவராக இருக்கலாம் என்று அடம் பிடிக்கிறார். இதனால், அன்புமணி என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சென்னையில் தங்கியிருந்த போது ஊடக நண்பர்கள் படுத்திய பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. ஊடக நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு விடை சொல்லிவிட்டு வந்தேன். சமாதான பேச்சுவார்த்தை பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். குருமூர்த்தி சென்னையில் என்னை சந்தித்தார். உங்கள் வாழ்த்துக்களோடு முடிவுகள் வரலாம். மன்னிப்பு என்பது பிரச்சினை இல்லை.

நான் விரும்பியது போல் என்னால் தொடங்கப்பட்ட கட்சி, 96ஆயிரம் கிராமங்களுக்கு நான் சென்று வளர்த்த கட்சிக்கு என் மூச்சு இருக்கும் வரை நான் தலைவர். அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி கொடுத்துள்ளோம். மறைந்த என் நண்பர் கருணாநிதி பாணி. “கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.”. கலைஞர் இறக்கும் வரை கட்சிக்கு தலைவராக இருந்தார். அதுபோல நான் என மூச்சிருக்கும் வரை தலைவராக இருப்பேன் என்றார்.
என்னோடு ஆதி காலத்தில் இருந்து பயணித்த கட்சி நிர்வாகிகள், கட்சிக்கு தொண்டு செய்தவர்களுக்கு, ஒதுக்கப்பட்டவர்களுக்கு நல்ல பொறுப்புகளை கொடுத்து உள்ளேன். பொறுப்புகளை நீடித்து நிலைத்து நிற்கும் என கூறியுள்ளேன். அவர்கள் அச்சத்தை போக்கியுள்ளேன். இது நிரந்தர பொறுப்பு என கூறியுள்ளேன்.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஆனால், இந்தப் பிரச்சினைக்கு இன்னும் முடிவு எட்டப்படவில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனது 60-வது திருமண நாள் விழாவுக்கு அன்புமணி வராதது வருத்தமாக இருக்கிறது. உங்களின் 25வது திருமண நாளில் உங்கள் குழந்தை வரவில்லை என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனக்கு இருந்தது.
அன்புமணி புகைப்படம் அகற்றப் பட்டது, விஷமத்தனமானது. புகைப்படத்தை யார் கிழித்தார்கள் என்பது எனக்கே தெரியாது. தமிழ்நாடு மக்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்து வரும் தலைவர் களை கொச்சப்படுத்தக்கூடாது. மேலும் அரசியல் கட்சி நடத்துபவர்களை கேட்டுக்கொள்கிறேன். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மாற்றுகருத்து சொல்லலாம். ஆனால் தலைவர்களை கொச்சைப்படுத்தகூடாது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி, என்ன முடிவு எடுக்கலாம் என நினைக்கிறேன். அதுகுறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்படும். பொதுக்குழுவுக்கு முன்பாக செயற்குழு, நிர்வாக குழு கூடும். தேர்தல் சம்பந்தமான யுத்திகள், யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வது பொதுக்குழு. தேவைப்படும் நேரத்தில் பொதுக்குழு கூட்டி கருத்து கேட்டு முடிவெடுப்போம் என்று கூறியவர், அன்புமணி செயல்தலைவர் பொறுப்பை ஏற்றால் பிரச்சினை முடிந்தது என்றார்.
ஏற்கனவே அன்புமணி கட்சி தலைவர் பொறுப்பை 3 ஆண்டுகள் வைத்திருந்தார். ஆனால் சரியாக செயல்படவில்லை என்று கூறியவர், கட்சிக்காரர்களை உயர்த்தி பார்த்தவன் நான். இன்றைக்கு என் மனசு மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் நீ தான் கட்சியின் தலைவர் இரு என மனசாட்சி சொன்னது.
கட்சி தலைவர் பதவி ஒன்றும் பெரிய பதவி இல்லை. அதனை ஏற்கக்கூடாதா? என் மூச்சு காற்று அடங்கிய பிறகு அந்த பொறுப்புக்கு முகுந்தனோ, சுகந்தனோ வரப்போவதில்லை. பதவி சுகத்தை விரும்பி இருந்தால் மத்தியில் எந்த பொறுப்பும் எனக்கு கிடைத்திருக்கும். பல பிரமுகர்களுடன் நெருக்காக இருந்துள்ளேன். பிரதமர் மோடியும் என்னோடு நட்பாக இருந்துள்ளார். சேலத்தில் கட்டிப்பிடித்து மோடி அன்பை வெளிக்காட்டினார். பலரை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளு மன்ற உறுபினராக, மத்திய அமைச்சராக ஆக்கியுள்ளேன் என்று கூறினார்.
மேலும், எனக்கு பிறகு கட்சி தலைவராய யார் வருவார்கள் என எல்லோருக்கும் தெரியும். அன்புமணி ஆதரவாளர்களின் நிலை அவர்களின் மனசாட்சி படி நடக்கும். ஜி.கே.மணி உழைப்புக்கு ஈடாக யாரையாவது சொல்ல முடியுமா. தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார் என்றவர்,
இடஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக விரைவில் தெரிவிப்போம் என்று கூறியதுடன், இடஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்நாடு தாங்காத அளவுக்கு போராட்டம் இருக்கும் . ஆனால் அந்த அளவுக்கு போகாமல் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். நாங்கள் 10.5 சதவீதம் தான் கேட்கிறோம். கொடுக்கலாமே. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு கூறினார்.