சென்னை

ஜினிகாந்த் மேல் மட்டத்தினர், கீழ் மட்டத்தினர் எல்லோரையும் புரிந்துக் கொள்ளும் வேளையில் கமல் மேல் மட்டத்தினரை மட்டுமே புரிந்துக் கொள்வார் என தயாரிப்பாளர் கலைஞானம் கூறி உள்ளார்.

கடந்த 26ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.  வரும் 31 ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக ரஜினி அறிவித்தது பலரின் மனதில் பல எதிர்பார்ப்புக்களை எழுப்பியுள்ளது.  நடிகர் கமலஹாசனும் தான் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.  இந்நிலையில் தயாரிப்பாளர் கலைஞானம் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

கலைஞானம்

அந்த பேட்டியில், “ரஜினிகாந்த் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்.  தனிக் கட்சி துவங்குவார்.  அனைத்து நடிகர்களிடம் ஆதரவு கோருவார்.  தற்போது உடனடியாக நடிகர்கள் யாரும் அரசியலில் இறங்கமாட்டார்கள் என எனக்கு தோன்றுகிறது.  எதையும் செயல் படுத்துவதில் திரைத்துறைக்கும் அரசியலுக்கும் ஒரு நெருக்கம் உண்டு.

கமலஹாசன் கடந்த 2, 3 மாதங்களாகத் தான் அரசியல் பற்றி பேசி வருகிறார்.  ரஜினிகாந்த் 10-15 ஆண்டுகளாக அரசியல் குறித்து பேசி வருகிறார்.  பலரின் ஆலோசனைகளையும் ரஜினி கேட்டு வருகிறார்.  கமலஹாசன் மேல்மட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே புரிந்துக் கொள்வார்.  ஆனால் ரஜினிகாந்த் மேல் மட்டம் கீழ் மட்டம் நடுமட்டம் என அனைத்து வித மக்களையும் புரிந்துக் கொள்வார்   மேலும் என்னை பொருத்தவரை கமலுக்கு கீழ்மட்டத்தில் செல்வாக்கு இருக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

தற்போதுள்ள நிலையில் ரஜினியால் மட்டுமே மாற்றத்தை அளிக்க முடியும்.  தனக்கு வாழ்வு கொடுத்த மக்களுக்காக பாடுபடுவதிலும் நன்மை செய்ய விரும்புவதிலும் ரஜினியும் எம் ஜி ஆர் போலவே இருக்கிறார்.  ரஜினியால் தனது செல்வத்தைக் கொண்டு எத்தனை பேருக்கு உதவ முடியும்.   ஆனால் அரசியல் எனும் பொக்கிஷத்தைக் கொண்டு பலருக்கு உதவ முடியும்.  ரஜினிக்கு நான் சொல்லிக் கொள்ளும் அறிவுரை, “முன் வைத்த காலை ஒரு போதும் பின் வைக்காதே.  அவ்வாறு பின் வைப்பது இழுக்கு” என கலைஞானம் கூறி உள்ளார்.